முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் சங்கம் நன்றி
கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையை அறிவித்த முதல்வருக்கு கரும்பு விவசாய சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.இதுகுறித்து கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க ரூ.247 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 2023-24 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கியவர்களுக்கு டன்னுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகை சேர்த்து விவசாயிகள் ரூ.3,134 பெறுவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கரும்பு ஒரு டன்னுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள 2,919.75 ரூபாயுடன் மாநில அரசின் ஊக்கத் தொகையான 215 ரூபாய் சேர்த்து கரும்புக்கு டன் ஒன்றுக்கு 3,134.75 ரூபாய் கிடைக்கும். இந்த சிறப்பு ஊக்கத்தொகையால் தமிழ்நாட்டில் இயங்கி வரும் 2 பொதுத்துறை,12 கூட்டுறவு மற்றும் 16 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2023-24 அரவைப்பருவத்தில் கரும்பு வழங்கிய சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
இதுகுறித்த விவசாயிகளின் விபரம் சேகரிக்கப்பட்டு, சர்க்கரைத்துறை இயக்குநர் அலுவலகத்தால் கூர்ந்தாய்வு செய்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களின் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரையின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.எனவே தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.