திருக்கோவிலூரில் உயிருடன் பிறந்த கன்றின் கால்களை கால்நடை உதவியாளர் வெட்டிய சம்பவம் அதிர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட டி. தேவனூர் கிராமத்தில் வெள்ள புத்தூர் ரோடு முதலியார் தெருவைச் சேர்ந்த நாராயணன் (65) என்பவரது பசுமாடு கன்று போடும் தருவாயில் இருந்தது. பிரசவம் பார்க்க டி. தேவதூதர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கால்நடை உதவியாளர் மணிவண்ணனை அழைத்துள்ளார்.
அப்போது மணிவண்ணன், “கன்று வயிற்றுக்குள் இறந்துவிட்டது. எப்படியாவது கன்றை வெளியே எடுக்க வேண்டும். இல்லையென்றால் பசுமாடு உயிரிழந்துவிடும்” என்று கூறி கன்றை வெளியே எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், கன்றின் முன் கால் மட்டுமே வெளியே வந்துள்ளது. இதையடுத்து, பசு மாட்டிற்குள் இருந்த கன்றின் முன் பக்க இரண்டு கால்களை வெட்டி வெளியே எடுத்தபோது கன்று உயிருடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறையாக கால்நடை மருத்துவர் இல்லாமல் ஓய்வு பெற்ற கால்நடை உதவியாளரைக் கொண்டு இதுபோன்ற பிரசவம் பார்க்க உயிருடன் இருந்த கன்றின் காலை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.