திண்டிவனத்தில் தொடர் மின் தடையால் பொதுத் தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் முன்னறிவிப்பு இன்றி ஏற்படும் தொடர் மின்தடையால் பொதுமக்கள் மட்டுமின்றி பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கோடை காலம் துவங்கி விட்டாலே மின்துறையினர் அடிக்கடி முன்னறிவிப்பின்றி இரவு, பகல் என்று பாராமல் மின்வெட்டுகள் ஏற்படுத்துவது ஆண்டாண்டுகளாகத் தொடர்வதாக உள்ளது.
இதேபோல் திண்டிவனம் நகரப் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கும் மேலாக பகலில் மட்டுமன்றி இரவு நேரங்களிலும் முன்னறிவிப்பு ஏதுமின்றி அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் அமைந்துள்ள சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று தொடர்ந்து ஒரு மணி நேரம் ஏற்பட்ட திடீர் மின்வெட்டால் அனைத்து அரசு பணிகளும் முற்றிலும் முடங்கிப் போயின.
இரவு நேரங்களில் ஏற்படுத்தப்படும் திடீர் மின்வெட்டால் தற்பொழுது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த சில தினங்களாக ஏற்பட்டு வரும் திடீர் மின்வெட்டால் பொதுமக்கள் மட்டுமின்றி பள்ளி மாணவ மாணவிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.