ஆரணி: ஆரணி அருகே பகுதி நேர ரேஷன் கடை துவங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே பாளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மேலும் வேலூர்- கடலூர் தேசிய நெடுஞ்சாலை கூட்ரோடு பகுதியில் அதே கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதி மக்கள் நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்க 2 கிலோமீட்டர் தொலைவில் செல்ல வேட்டியதால் கூட்ரோடு பகுதியில் அரசு பகுதி நேர நியாய விலைக் கடை இயங்க நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் அமைச்சரும் ஆரணி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த பரிந்துரையின் பேரில், கூட்டுறவு பண்டகசாலை அதிகாரிகள் பாளைய ஏகாம்பர நல்லூர் கூட்ரோடு பகுதியில் பகுதி நேர நியாய விலைக் கடை தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் இயங்க அனுமதித்தனர்.
இதனையடுத்து முன்னாள் அமைச்சரும் ஆரணி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன் நேரில் சென்று தற்காலிகமாக இயங்கும் வாடகை கட்டிடத்தை ஆய்வு செய்தார்.
பின்னர் உடனடியாக வரும் நிதியாண்டில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் அமைத்து தருவதாக உறுதியளித்தார்.