திண்டிவனத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மூன்றாவது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் (டாக்பியா) சார்பில் தொடர் வேலை நிறுத்த போராட்டம் கடந்த 21ஆம் தேதி மாவட்ட செயலாளர் அனந்தசயனன் தலைமையில் நடைபெற்றது.
இதில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 147 சங்கங்கள் மூடப்பட்டு, அதன் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 760 நியாயவிலை கடைகளும் மூடப்பட்டு தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் மக்களுக்குரிய விநியோக திட்ட பணியான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் வழங்குவது பாதிக்கப்பட்டது.
அதேபோல் சங்கங்களின் மூலமாக வழங்கப்படும் பயிர் கடன், நகை கடன், மகளிர் குழு கடன்கள் தடைப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு பயிர் செய்ய வழங்கப்படும் உரம் விநியோகமும் பாதிக்கப்பட்டது.
இதனால் மாவட்ட அளவில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அளவில் 200 கோடி கிராம அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போராட்டத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை என்றால் தொடர் வேலை நிறுத்த போராட்டமும், அதனைத் தொடர்ந்து சிறை நிரப்பும் போராட்டமும் நடத்த உள்ளதாக மூன்றாவது நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தின் போது அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.