விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வெகு சிறப்பாக நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வாணை சமேத சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதனையொட்டி கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரப் பெருவிழா துவங்கியது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவில் பல்வேறு வாகனங்களில் உற்சவர் கோவிலின் மூன்று பிரகாரங்களில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்து வந்தது. 8-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணமும், அதனைத் தொடர்ந்து வெள்ளி குதிரை வாகன உற்சவமும் நடந்தது.
பங்குனி உத்திர விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று காலை 5.46 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. முதலில் விநாயகர் தேரும், அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக வந்த தேரில் வள்ளி, தெய்வானை சமேதராய் சுப்பிரமணிய சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலயசுவாமிகள் வடம் பிடித்து இழுத்துத் துவக்கி வைத்தார்.
பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக அலகு குத்தி மலையேறினர். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவையொட்டி பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் திருமடத்தினர் செய்திருந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மயிலத்திற்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிகளவில் பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வருவதையொட்டி குற்றச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின்பேரில் திண்டிவனம் டி.எஸ்.பி. பிரகாஷ் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.