கடலூர் கடற்கரையில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை, கிள்ளை முழுக்குத்துறை, சி.புதுப்பேட்டை, வல்லம்படுகை, கூடலையாத்தூர் மற்றும் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் அருகில் உள்ள மணிமுத்தாறு, நல்லூர் கிராமம் ஆகிய இடங்களில் மாசி மகத் திருவிழா நடைபெற்றது.
கடலூர் தேவனாம்பட்டினத்தில் வெள்ளி கடற்கரையில் நடந்த மாசி மகத் திருவிழாவில் கடலூர் மற்றும் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஏராளமான சாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்டுப் பல வகையான பல்லக்குகளில் மேளதாளத்துடன் கொண்டுவரப்பட்டன. கடலில் சாமி சிலைகளுக்கு தீர்த்தவாரி நடந்தது.
நேற்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி வழிபட்டனர். மாசி மகத் திருவிழாவில் பக்தர்கள் பலர் தங்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தனர்.
கடல் சீற்றமாகக் காணப்பட்டதால், பக்தர்கள் கடலில் குளிப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மீட்புக் குழுவினரும் நீச்சல் வீரர்களும் ரப்பர் படகுகளுடன் தயார் நிலையில் இருந்தனர்.
கடற்கரையில் அமைக்கப்பட்ட உயர் கோபுரங்களிலிருந்து காவல்துறையினர் பக்தர்களை ஒழுங்குபடுத்தினர். கண்காணிப்புப் பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், பல்வேறு இடங்களில் மாசி மகத் திருவிழாவில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகளும் பந்தல் அமைக்கப்பட்டு நீர்மோரும் வழங்கப்பட்டன.