கண்ணமங்கலம் பேரூராட்சியின் கூட்டம் நேற்று பேரூராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் குமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஏ.சி.முனுசாமி வரவேற்றார். இளநிலை உதவியாளர் நித்யா தீர்மானங்கள் வாசித்தார். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கண்ணமங்கலம் பேரூராட்சியில் பணிபுரியும் சீருடை பணியாளர்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக சீருடைகள் தையல் கூலியுடன் வழங்கப்படும். 2023-24ஆம் ஆண்டு திருத்திய மதிப்பீடு, 2024-25ஆம் ஆண்டு உத்தேச மதிப்பீடு தயாரிக்கப்படும். கவரைத் தெருவில் பழுதடைந்த சிறுபாலத்தை பொது நிதியில் சீரமைக்கப்படும். 2வது வார்டு, 5வது வார்டுகளில் தாழ்வாக செல்லும் உயர் மின் கம்பிகளை வார்டு உறுப்பினர்கள் மரகதவள்ளி, டைசிராணி ஆகியோர் கொடுத்த மனுக்கள் மீது பொது நிதியில் சீரமைக்கப்படும். 13வது வார்டு வசந்தம் நகர் பகுதியில் அனுமதியற்ற சில மனைகளை வரன் முறை செய்ய ஒப்புதல் வழங்கப்படும்.
பெருமாள் கோவில் தெருவிலிருந்து அக்ரஹார தெரு வழியாக அம்பேத்கர் நகர பகுதிக்கு செல்ல புதிதாக சாலை அமைப்பது, புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக சாலையில் நடுவே உள்ள கல்வெட்டை அகற்றப்படுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் வெற்றி முடிவ நன்றி கூறினார்.