ஜவ்வாதுமலைப்பகுதியில் ரூ.1.32 கோடி புதிய சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் மற்றும் கலசபாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி. சரவணன் நேரில் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் , ஜவ்வாது மலைப்பகுதியில் ஜமுனாமரத்துார் உட்பட 75 மலை கிராமங்கள் உள்ளன. பல ஆயிரம் மக்கள் வசித்து வரும் நிலையில் மலை பகுதியில் முறையான சாலை வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் பெரியவல்லி குட்டக்கரை வரை 3 கி.மீட்டர் தொலைவுக்கு உரி சாலை வசதி இல்லாத காரணத்தால் மருத்துவ தேவை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு பைக் மற்றும் வாகனங்களில் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். சாலை வசதி கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் திருவண்ணாமலை வந்த துணை முதல்வர் உதயநிதியிடம் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
இதையடுத்து இதில் உரிய கவனம் செலுத்தும்படி பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் துணை முதல்வர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து எ.வ.வேலு துரித நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் மற்றும் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் துறை சார்ந்த அதிகாரிகள் நேற்று நேரில் சென்று சாலை போடும் பணிகளை தீவிரப்படுத்தும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்: ஜவ்வாது மலைபகுதியில் பெரியவள்ளியிலிருந்து குட்டகரை வரை ரூ.1.32 கோடியில் 3 கிலோ மீட்டருக்கு சாலை போடும் பணி துவங்கியுள்ளது.இந்த் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதே போன்று சாலை போடும் பணி பல இடங்களில் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
என்றார்.
நீண்ட நாள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி கொடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கலசபாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு மற்றும் நன்றியை தெரிவித்தனர்.
இதில் ஜமுனாமரத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், குட்டக்கரை ஊராட்சி மன்ற தலைவர் சிவானி கோவிந்தராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.