தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை,அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள மலைக்குச் செல்வதற்கு வனத்துறையில் சிலர் பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவண்ணாமலை , அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை தடை செய்யப்பட பகுதியாகும்.
அந்த மலைமீது யாரும் ஏறக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது. வனத்துறை சார்பில் திருவண்ணாமலை கோயிலுக்கு பின்புறம் உள்ள மலைப்பகுதி ‘தடை செய்யப்பட்ட பகுதி’ என்று அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், வனத்துறையில் சிலர் பணத்தை வாங்கிக்கொண்டு மலைக்குச் செல்வதற்கு அனுமதி அளிக்கின்றனர். இவ்வாறு அனுமதி அளிக்கப்படுவதால்தான் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் கூட இந்த மலைக்கு ஒரு வழிகாட்டியுடன் சென்ற வெளிநாட்டு பெண் பக்தர் பாலியல் வன்முறைக்கு உள்ளானார்.
மலைமீது ஏறக்கூடாது என்ற தடை இருக்கும்போது அவர்கள் எப்படி மலைக்குச் சென்றார்கள் என்ற அதிர்ச்சிக்குரிய கேள்வி பலருக்கும் ஏற்பட்டது. ஒரு சில வனத்துறை பணியாளர்களால் ஒட்டுமொத்த வனத்துறைக்கும் கெட்டபெயர் ஏற்படுகிறது.
அதேபோல தற்போது ஒரு வெளிநாட்டு சாமியார் மலைமீது ஏறி, ஒரு பாறை மீது தவம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சாமியார் எப்படி மலை மீது ஏறினார். எப்போது ஏறினார்? எத்தனை நாட்களாக அங்கு தங்கியுள்ளார்? அவர் மலைக்குச் செல்வதற்கு அனுமதி அளித்தது யார் என்ற பல கேள்விகள் எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியுளளது.
இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக, மலைக்குச் செல்வதற்கு பணம் பெற்று அனுமதி வழங்கும் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் மீண்டும் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம். அப்படியான ஒரு அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னதாக மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பக்தர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.