திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. இதில் புதிதாக பொறுப்பேற்ற தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளை தகவல் தொழில் நுட்ப அணி திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் அரவிந்த் அறிமுகப்படுத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மண்டல தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து உரையாற்றிய திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திராவிடத்தின் ஆணிவேர், திராவிடம் எவ்வாறு உருவானது, நீதி கட்சி வரலாறு உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை ஆழமாக எடுத்துரைத்து, அதனை புதிதாக பொறுப்பேற்ற தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் பொதுமக்களிடம் பரப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் வரும் 2026 சட்டசபை தேர்தலில் தகவல் தொழில்நுட்ப அணியின் பங்கு மிகப் பெரியது என்றும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்றெடுக்க பாடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் பொருளாதார நிலையை ஒரு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தி, ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திய தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அவரது சாதனைகளை ஒவ்வொருவருக்கும் எடுத்துக் கூறும் வகையில் தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் சமூக வலைத்தளங்களில் தமிழக அரசின் சாதனைகளை பரப்ப வேண்டும் என்றும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் திமுக நகர செயலாளர் வாரை பிரகாஷ், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் அரவிந்த் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.