வேலூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச முடி திருத்தும் நிலையம் தனியாக திறக்கப்பட்டது மாற்றுத்திறனாளிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் ஒரு சிறிய முடிதிருத்த நிலையம் வைத்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநல பாதிக்கப்பட்டவர்கள், ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக முடித்திருத்தம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பழைய மீன் மார்க்கெட் அருகில் புதிய முடிதிருத்தும் கடை திறக்கப்பட்டது. இந்த கடையில் மாற்றுத்திறனாளிகள் வருவதற்கு ஏதுவான சாய்வு தளம் அமைத்து ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி. செல்வம் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தார். பின்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு இலவசமாக முடிதிருத்தம் செய்யப்பட்டது. அத்துடன், அவர்களுக்கு உணவு பொருட்கள், இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் ஜிவி செல்வம் கூறியதாவது:
இந்தியாவிலேயே முதல்முறையாக மாற்றுத்திறனாளிக்கான இலவச முடிதிருத்த கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல் காரணம் ராஜா தான். அவர் பத்தாண்டுகளாக மாற்றுத்திறனாளிக்கான இலவச முடி திருத்தம் செய்து வருகிறார். அவர் என்னிடம் அணுகிய போது தலைமுறை பேரவையின் சங்கத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. கடவுள் நமக்கு கொடுப்பதை மற்றவர்களுக்கு நாம் கொடுக்க வேண்டும். அது செல்வமாகட்டும், கல்வியாகட்டும், அன்பாகட்டும், பண்பாகட்டும், நாம் மற்றவர்களுக்கு கொடுத்தால் தான் நாம் வளர்வோம், அதற்காகத்தான் இதை செய்து கொண்டிருக்கிறோம்.
இன்று முக்கியமான இந்த நிகழ்ச்சியில் சொல்ல வேண்டிய விஷயம் உலக அளவில் அதிகமாக மாற்றுத் மாற்றுத்திறனாளிகள் உள்ள நாடு ரஷ்யா 27 சதவீதம். இந்தியாவில் சிக்கிம் மாநிலத்தில் 2.98 சதவீதம், சராசரியாக இந்தியாவில் 2.21 சதவீதம் தமிழ்நாட்டில் 1.6% தான் இருக்கிறார்கள்.
மாற்றுத்திறனாளிகளின் வெளித்தோற்றத்தில் சில குறைகள் இருக்கலாம் ஆனால் உள்தோற்றத்தில் அவர்கள் சிறந்தவர்கள். இதேபோன்ற முன்னெடுப்புகள் தமிழ்நாடு முழுவதும் பரவி நடைபெற வேண்டும். இந்த மாதிரி தொண்டு நிறுவனங்கள் பல்வேறு மாவட்டங்களில் இருக்கின்றன. இதைப் பார்த்து அவர்களும் முடி திருத்தத்தை அந்தந்த மாவட்டத்தில் தொடங்க வேண்டும் என்பது எங்களுடைய எண்ணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.