பேரணாம்பட்டு அருகே அரசு உயர்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் உதயகுமார், மாணவ, மாணவிகளிடம் கடுமையான முறையில் அடித்து துன்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளிடம் உதவி தலைமை ஆசிரியர் உதயகுமார் சில்மிஷமாக நடந்து கொள்வதும், தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதாகவும் மாணவிகள் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளனர். இதனை அந்த கிராமத்தில் உள்ள சில ஊர் பெரியவர்களுக்கு தெரியவந்ததை அடுத்து, மாணவிகளின் பெற்றோர்களை வைத்து மாவட்ட ஆட்சியருக்கு தெரியப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், குடியாத்தம் கோட்டாட்சியர் சுப்பு லட்சுமி தலைமையில் மாணவிகளிடம் விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர் பாஸ்மார்பெண்டா கிராமத்திற்கு சென்று மாணவிகளிடமும் பெற்றோர்களிடமும் விசாரணை செய்தனர்.
அவர்களின் நடத்திய விசாரணை அடிப்படையில், வழக்கு பதிவு செய்து உதவி தலைமை ஆசிரியர் உதயகுமாரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் ஆசிரியர்களுடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.