காட்பாடி ஜாப்ராபேட்டையில் கிளை அஞ்சலக அதிகாரி மக்களின் பணம் ரூ.25 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்ததாக கிராம மக்கள் கிளை அஞ்சலகத்தை முற்றுகையிட்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள ஜாப்ராபேட்டையில் மத்திய அரசின் அஞ்சல் துறையின் கிளை அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது.
இதில் லத்தேரி அன்னகுடி பகுதியைச் சேர்ந்த சுடர் நிதி என்ற பெண் கிளை அஞ்சலகராகப் பணியாற்றுகிறார். கடந்த ஐந்தாண்டுகளாக ஜாப்ராபேட்டை பகுதியைச் சேர்ந்த சுமார் 400-க்கும் மேற்பட்டோர் இந்த அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் தொடர்ந்து பணம் செலுத்தி வந்தனர்.
அவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அனைத்து பாஸ்புக்குகளும் தன்னிடமே இருக்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்து பணங்களை வாங்கிக்கொண்டு வெள்ளை பேப்பரில் பெயர்களை எழுதிக்கொண்டு அவர் அனுப்பிவிடுவார். இதில் ஒரு இளைஞர் சுமார் ரூ.2.50 லட்சம் அஞ்சலக சேமிப்பில் சேமித்துள்ளார்.
பின்பு தனக்கு அவசர தேவைக்கு பணம் தேவைப்படுவதால் பணத்தை கேட்டுள்ளார். ஆனால் சுடர் நிதி அதற்கு பதில் கூறவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் வேலூரில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இதுகுறித்து தகவலை தெரிவித்துள்ளார். அங்கு அவருடைய கணக்கை பரிசோதனை செய்து பார்த்தபோது முதலில் கணக்கு துவங்கிய ரூ.500-க்கு பிறகு வேறு எதுவும் வரவு வைக்கப்படவில்லை என கூறினர்.
இதனைக் கேட்ட இளைஞர் அதிர்ச்சியடைந்து அஞ்சல் அலுவலகத்திற்கு வந்து விவரம் கேட்டபோது, அவர் எதுவும் தகவலை தெரிவிக்காமல் அஞ்சலகத்தைப் பூட்டிவிட்டு ஓடினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் தங்களுடைய கணக்கையும் பார்த்தபோது பலரும் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து கிளை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சுடர் நிதி குடியிருந்த வீட்டையும் காலி செய்துவிட்டு தலைமறைவானார். தற்போது பொதுமக்களிடம் சுமார் ரூ.25 லட்சத்திற்கும் மேலாக அவர் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து லத்தேரி காவல்நிலையத்தில் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் கடந்த ஐந்தாண்டுகளாக மக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு சேமிப்பு கணக்கில் வரவு வைக்காமல் கையாடல் செய்தது தெரியவந்துள்ளது.