திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 3வது கட்டமாக ரூ.26.48 லட்சம் மதிப்பீட்டில் வெள்ள நிவாரண பொருட்களை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆட்சியர் பா.முருகேஷ் அனுப்பி வைத்தார்.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாராணப் பொருட்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, மகளிர் திட்டம், வியாபாரிகள் சங்கம், மற்றும் தன்னார்வ அமைப்புகளின் சார்பில் நிதி திரட்டப்பட்ட ரூ.37.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை 2 வது கட்டமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஆட்சியர் பா.முருகேஷ் அனுப்பி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து 3வது கட்டமாக வெள்ள நிவாரணப் பொருட்களை திருவண்ணாமலை வருவாய் கோட்டத்தில் இருந்து வியாபாரிகள் சங்கம், தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் மூலம் திரட்டப்பட்ட ரூ.26.48 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை நேற்று அதிகாலை ஆட்சியர் பா.முருகேஷ் அனுப்பி வைத்தார்.