வேலூரில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், அண்ணா சாலை பகுதியில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு கற்பகம் வளாகத்தில் நேற்று தீபாவளி பட்டாசுகள் விற்பனையை மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் அரசு துறை அதிகாரிகள் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துவக்கப்பட்டு 81 ஆண்டுகளாக நல்ல முறையில் செயல்பட்டுவருகிறது. இதில் சென்ற ஆண்டு ரூ.85 இலட்சத்திற்கு பட்டாசு விற்பனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூபாய் 1 கோடி ரூபாய் என்ற இலக்கு பட்டாசு விற்பனையை துவக்கி வைத்திருக்கிறோம்.
பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும் நேரம் என்பது காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசுகளை வெடிக்கலாம். பட்டாசுகளை வெடிக்கும் போது மிக கவனத்துடன் பொதுமக்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மாதம் முதல் தேதியில் இருந்து ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. தினமும் பொதுமக்களுக்கு வழங்கும் பொருட்கள் குறித்து நாங்கள் ஆய்வு செய்கிறோம்.
ஒரு சில ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு பிரச்சனை இருந்து வருகிறது. அது குறித்து அங்கு பணி புரியும் விற்பனையாளர் எங்களிடம் தெரிவிக்கின்றனர். அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றோம்.
மேலும் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனைகளுக்கு அனுமதி இல்லை. தீபாவளி அன்று மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று தீயணைப்பு துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதுமான படுக்கை வசதிகள் நம்முடைய மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.