குடியாத்தம் நகர பகுதியை சுற்றி சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் விவசாயம் மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இக்கிராம மக்கள் ஆடு, மாடு, கோழிகளை வாங்க மற்றும் விற்பனை செய்ய பள்ளிகொண்டா அடுத்த பொய்கை, ஆந்திர மாநிலம், சித்தூர், பலமனேர் ஆகிய ஊருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இங்கிருந்து கால்நடைகளை ஏற்றி செல்ல மற்றும் அங்கிருந்து கொண்டு வர வாகனங்களுக்கு மட்டுமே ஆயிரக் கணக்கில் ரூபாய் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது.
குடியாத்தம் பகுதியில் இடம் தேர்வு செய்து கால்நடை சந்தை அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் பலமுறை மாவட்ட நிர்வாகம், கோட்டம், தாலுகா அளவில் நடைபெறும் விவசாயக் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.