கச்சிராயபாளையம் அருகே நீரோடைகள் ஆக்கிரமிப்பால் பொதுமக்களும், விவசாயிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபாளையம் அருகே உள்ள மண்மலை கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
காட்டுக்கொட்டாய் மற்றும் சூசை நகர், கரடிசித்தூர் எல்லை, மண்மலை எல்லை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. கோமுகி அணையிலிருந்து வரும் தண்ணீர் மண்மலை, கச்சிராபாளையம் சாலையில் உள்ள ஓடைகளின் வழியாக இந்த விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த பகுதியில் உள்ள 4 நீரோடைகளும் ஆக்கிரமிப்பு செய்து தனி நபர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் காட்டுக்கொட்டாய், சூசை நகர், கரடிசித்தூர் எல்லை, மண்மலை எல்லையில் வசிக்கும் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் விளை நிலங்களில் மழை நீர் தேங்கி நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவதால், விவசாயிகள் மிகவும் நஷ்டத்திற்கு ஆளாகும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை நீரோடை ஆக்கிரமிப்பால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வடக்கனந்தல் சுகாதார மருத்துவமனைக்கு சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் அவல நிலை உருவாகியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் விஷ ஜந்துக்களால் உயிரிழப்பு ஏற்படும் நிலையும் உள்ளது. அவசர காலத்திற்கு அழைத்துச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த நீரோடை பகுதிகளில் 500 மீட்டர் தார் சாலை போடப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மீதம் உள்ள 500 மீட்டரில் ஒரு தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் தார் சாலை அமைக்கப்படாமலும், நீரோடை ஆக்கிரமிப்பாலும் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், விவசாய நிலங்கள் மிகவும் பாதிக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மேலும் 500 மீட்டர் அளவில் தார்சாலை அமைத்து தர வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.