திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கழிவறைக்குச் சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம், கே.ஜி.எஃப் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி, ராஜேஸ்வரி, ஜெயலட்சுமி ஆகிய சகோதரிகளின் பூர்வீக நிலம் செஞ்சி அருகே உள்ளது. இந்த நிலம் தொடர்பான பட்டா ரத்து குறித்த விசாரணை திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெறுவதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதேபோல் இவர்களது எதிர் தரப்பை சேர்ந்த முனுசாமி என்பவரது தரப்புக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை பெங்களூரில் இருந்து சகோதரிகள் மூவரும் அவர்களது 74 வயது சகோதரர் ராஜரத்தினத்துடன் திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு அதிகாலையிலேயே வந்து சேர்ந்தனர். ராஜரத்தினத்திற்கு ஏற்கனவே ரத்த அழுத்தம், இதய கோளாறு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காலை 11 மணி அளவில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கழிவறைக்குச் சென்ற முதியவர் நெடுநேரமாகியும் வெளியே வராததால் சகோதரிகள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மயக்கமுற்று சாய்ந்த நிலையில் கிடந்த அவரை அலுவலக ஊழியர்கள் உதவியுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததை அடுத்து அவரது பிரேதத்தை சகோதரிகள் பெங்களூருக்கு எடுத்துச் சென்றனர்.