கடலூர், சி.கே.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் முன்னிலையில் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
மாணவர்களின் கலைதிறன்களை வெளிக்கொணரும் விதமாக 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாநில அளவில் கலையரசன், கலையரசி பட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் மற்றும் மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளும் பங்கேற்கும் வகையில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த போட்டிகளில் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு வரை 5 போட்டிகள், 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை 8 போட்டிகள், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 11 போட்டிகள், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு வரை 30 போட்டிகள், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை 30 போட்டிகள் என கவின் கலை / நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை தோற்கருவி, கருவி இசை துளை காற்றுக் கருவிகள், கருவி இசை தந்திக் கருவிகள், நடனம், நாடகம் உட்பட மொத்தம் 84 வகையான போட்டிகள் 5 பிரிவுகளில் நடத்தப்படுகின்றன.
பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்காக 3,19,452 மாணவ,மாணவிகள் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, பள்ளி அளவில் 58,303 மாணவ,மாணவிகள் தேர்வு பெற்றனர். குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் 8,589 மாணவ,மாணவிகள் தேர்வு பெற்றனர். தற்போது மாவட்ட அளவில் 2,863 மாணவ,மாணவிகள் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளனர். இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். மாணவ,மாணவிகள் தங்களது முழுத்திறனை வெளிப்படுத்தி வெற்றிபெற்று மாவட்டத்திற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் திருமதி சுந்தரிராஜா, மாநகராட்சி துணை மேயர் பா.தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் மரு.எஸ்.அனு முதன்மைக் கல்வி அலுவலர் திரு.ஆ.எல்லப்பன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித் திட்ட அலுவலர் சிங்காரவேல், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.கே.நாகராஜபூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.