விழுப்புரம் மாவட்டத்திற்கு தமிழக துணைமுதல்வர் வருகையை முன்னிட்டு ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் மாவட்டத்திற்கு தமிழக துணை முதல்வர் வருகைபுரிவதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சிய தெரிவிக்கையில், தமிழக துணை முதல்வர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் செயல்படுத்திய பல்வேறு சிறப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில் 05.11.2024 மற்றும் 06.11.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களின் திட்டப்பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் துறை சார்ந்த அரசு நலத்திட்ட வழங்குவது குறித்தும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இதில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மகளிர் திட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சமூக நலத்துறை, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை தோட்டக்கலைத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட வழங்கல் துறை, தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் பள்ளிக்கல்வித்துறை போன்ற பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளின் நிலை குறித்தும் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தேன். மேலும், நிறைவு பெறாத திட்டப்பணிகளை விரைந்து முடித்திடுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண அனைத்துத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் காஞ்சனா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.