திருப்பத்தூரில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை தலைமையில் தீஷா ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் சி.என்.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் முன்னிலை வகித்தார்.
மத்திய அரசும் மாநில அரசும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பயனாளிகளுக்கும் மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டது இக்குழு கூட்டம்.
மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற அனைத்து திட்டங்களின் பணிகள் செயல்பாடு குறித்தும் பணி முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, மேலும் தாமதமாக நடைபெறும் பணிகளை விரைவாக நடைபெறுவதற்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்தக் குழுவின் முக்கிய பணியாகிய ஒன்றிய அரசாங்கத்தின் நிதி எந்தெந்த துறைக்கு சென்றுள்ளது என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் அனைத்து துறை வளர்ச்சி பணி திட்டங்களின் நிதி செலவினங்கள் வெளிப்பாடுகள் மற்றும் குறைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற வளச்சி திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
ஆய்வு கூட்டத்தை தொடர்ந்து மாவட்ட தீஷா குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, மத்திய மாநில அரசுகளின் நிதி பங்களிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 43 துறைகளில் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தீஷா குழு ஆலோசனைக் கூட்டம் உறுதுணையாக இருக்கும். மேலும் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் குப்பைகளை கொண்டு செல்லும் வாகனங்கள் உள்ளிட்டவைகள் தேவைக்கேற்ப வழங்கப்பட்டுள்ளது. மக்கும் குப்பை மக்கா குப்பை போன்றவை முறையாக தரம் பிரிக்கப்படுகிறது எனவும், 100% பணிகள் முழுமையாக செயல்படும் அளவிற்கு முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், அனைத்து அரசு உயர் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கு பெற்றனர்.