வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி விருத்தாசலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பா.ம.கவினர் மனு அளித்ததால் பரபரப்பு நிலவியது. கடலூர் மேற்கு பாமக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையிலான பாமகவினர் நேற்று விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து பேரணியாக விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு வந்து துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மோகனிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கடந்த 04.11.2024 அன்று கடலூர் மாவட்டம் புவனகிரியில் நடைப்பெற்ற விடுதலை சிறுத்தை கட்சியின் கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் நீதிவள்ளல் மற்றும் அரங்க தமிழ் ஒளி, செல்வராணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மாநில வன்னியர் சங்க தலைவர் புதா அருள்மொழியை குறிப்பிட்டு அவரை கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். மேலும் வன்னிய சமுதாய மக்களை தரக்குறைவாக விமர்சித்து பேசி இரு சமுதாய மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையிலும், பொது அமைதியை கெடுத்து பொதுவெளியில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தற்போது சமூக ஊடகங்களிலும் பரவி வருகிறது. இதனால் தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு இருசமுதாய மக்களிடையே சாதி கலவரம் ஏற்பட வாய்புள்ளது. ஆகவே பொது அமைதியை கெடுத்து சமுக ஒற்றுமைக்கு எதிராகவும், வன்னியர் இன மக்களை தரம் தாழ்த்தி அதன் தலைவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து சாதி மோதல்களை தூண்டும் உள் நோக்கத்துடன் பொது வெளியில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, பாமகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. முன்னதாக பாமகவினர் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக கிடைத்த தகவலின் பேரில் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் பாமகவினரை கைது செய்வதற்காக வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. காவல்துறையினர் உறுதியளித்ததின் பெயரில் பா.ம.க.வினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.