திண்டிவனம் நகர மன்ற அவசரக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால், பெண் இளநிலை பொறியாளர் கண்கலங்கிச் சென்ற சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
திண்டிவனம் நகர மன்ற அவசரக் கூட்டம் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் உள்ளிட்ட 23 கவுன்சிலர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்ததால், கூட்டம் 20 நிமிடம் தாமதமாகத் தொடங்கியது.
கூட்டத்தில், கடந்த 2022ஆம் ஆண்டு நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுவதற்கும், புதிய மின்கம்பங்கள் அமைத்து மின்விளக்குகள் அமைப்பதற்கும் தமிழக அரசு ரூ.44 லட்சம் நிதி ஒதுக்கிய நிலையில், இதுவரை அந்த நிதி பயன்படுத்தப்படவில்லை என்று திமுகவைச் சேர்ந்த 13-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பாபு குற்றம்சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, திண்டிவனம் 26-வது வார்டில் கடந்த பெஞ்சல் புயலில் உடைந்த பாலம் இதுவரை செப்பணிடப்படாத நிலையில், வரும் நிதியாண்டில் ஏப்ரல் மாதம் நிதி ஒதுக்கப்படும் என்று தெரிந்திருந்தும், நகராட்சி நிதியிலிருந்து ரூ.8 லட்சம் செலவில் தற்காலிக பாலம் அமைக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது ஏன் என்று 33-வது வார்டு கவுன்சிலர் சின்னசாமி ஆணையரிடம் கேள்வி எழுப்பினார்.
பின்னர், 31-வது வார்டு பாமக கவுன்சிலர் மணிகண்டன், கடந்த 3 ஆண்டுகளாக சாலை வசதி, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராத நகராட்சி நிர்வாகம், வரி மட்டும் ஏன் கடுமையாக வசூல் செய்கிறது? இதற்கு நான் ஏன் நகர மன்ற உறுப்பினராக இருக்க வேண்டும்? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
திமுக கவுன்சிலர் ரம்யா ராஜா பேசுகையில், கவுன்சிலர் கேட்கும் கேள்விகளுக்கு நகர மன்ற தலைவர் மட்டுமே பதில் கூறுவதை விட்டுவிட்டு, வேறொரு கவுன்சிலரை பதில் அளிக்கச் சொல்வது ஏன்? இனிமேல் இதுபோல் நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.
அதேபோல், நான்காவது வார்டு திமுக பெண் கவுன்சிலர் லதா சாரங்கபாணி, தனது வார்டில் சமுதாயக் கூடம் கட்டப்பட்ட நிலையில், அதற்கு மேலும் மேல் தளம் அமைக்கப்பட வேண்டும் என மனு கொடுத்திருந்தும், அதிகாரிகள் ஏன் அதற்குரிய திட்ட மதிப்பீட்டை கொடுக்கவில்லை என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனால் திடீரென்று நகராட்சி பெண் இளநிலை பொறியாளர் கண் கலங்கியபடி வெளியேறிய சம்பவம், அங்கு சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.