திண்டிவனம் அருகே கல்லூரி மாணவி காதல் பிரச்சனையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த பெருமுக்கல் பகுதியை சேர்ந்தவர் வள்ளி. இவரின் கணவர் லட்சுமிபதி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
பின்னர் தனது மகள் தீபிகாவுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திண்டிவனம் அடுத்த பெரப்பந்தாங்கல் பகுதியில் வள்ளியின் தந்தை சாமிநாதனுடன் வீடுகட்டி தனது மகள் தீபிகாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தீபிகா மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவருக்கும், பெருமுக்கல் அடுத்த உலகாபுரம் பகுதியை சேர்ந்த சக கல்லூரி மாணவருக்கும் இடையே காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் காதலனுடன் திருமணம் செய்துவைக்க தனது தாயை வற்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்குத் தாய் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த மாணவி தீபிகா, நேற்று முன்தினம் இரவு தனது காதலனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதாக கூறிவிட்டு செல்போனை துண்டித்து விட்டார்.
பின்னர் வீட்டின் கதவை தாழிட்டு உள்ளே சென்று சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். செல்போனில் தற்கொலை செய்து கொள்வதாக தீபிகா கூறியதை அறிந்த காதலன், பெரப்பந்தாங்கல் வந்து தீபிகாவின் தாத்தாவிடம் கூறி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது தீபிகா மின்விசிறியில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே அவரை கீழே இறக்கி பார்த்தபோது உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.