அரியலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் தொகுப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாநகராட்சி துணைமேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் 1,912 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நகப்பெட்டகத்தை ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 0-6 வயது வரையுள்ள குழந்தைகளில் பலரும் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக இருப்பதைத் தெரிந்துகொண்டு, மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டமும் அறிவித்து, ஊட்டச்சத்தை உறுதி செய் என்னும் இந்த திட்டத்தின் செயல்பாடுகளை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் வாயிலாக முதல் வயதுடைய குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் வியக்கத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளில் 77.3% குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.
தற்போது தொகுப்பாக குழந்தைப்பெற்ற தாய்மார்களின் ஆரோக்கியத்தினை பாதுகாக்கவும் ஊட்டச்சத்து குறைபாட்டிளை நீக்கி வலிமை பெற்றவர்களாகவும், ஆராக்கியமானவர்களாகவும் சுகாதாரம் பேணுதல், தூய்மையான குடிநீர், சுற்றுப்புறத் தூய்மை குறித்த நல்ல பழக்கவழக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட “ஊட்டச்சத்தை உறுதி செய்” என்னும் இரண்டாம் கட்ட தொகுப்பினை அரியலூர் மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்.
அதனடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்ட 1,912 தாய்மார்களுக்கு புரோட்டீன் பவுடர், பேரீச்சம்பழம், நெய், காட்டன் துண்டு, சத்துமாவு, இரும்புச்சத்து டானிக் உட்பட 7 பொருட்கள் அடங்கிய தாய்சேய் நலப்பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
பிறப்பு முதல் 6 மாதம் வரையிலான குழந்தைகளுக்கு திட உணவு வேறு ஏதுமின்றி தாய்ப்பால் மட்டுமே வழங்கப்படுவதால் தாய்மார்களின் ஆரோக்கியத்தை பேணுவது அத்தயாவசியமாகிறது. 0-6 மாதத்திற்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையின் படி, மாநிலம் முழுவதும் 26,215 குழந்தைகள் கடும் ஊட்டச்சத்து குறைபாட்டிலும், 50,490 குழந்தைகள் மிதமான ஊட்டச்சத்து குறைபாட்டிலும் உள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு அளப்பறியது. அதிலும், தாயின் உடல் நலனை காப்பது இன்றியமையாதது. குழந்தை கருவில் உருவான நாள் முதற்கொண்டு அருகிலுள்ள குழந்தைகள் மையங்களில் பதிவுசெய்து, அங்கு அளிக்கப்பட்டுவரும் சேவைகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.