திண்டிவனத்தில் மூன்று பேர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், கவலைக்கிடமான நிலையில் கல்லூரி மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சிங்கனூர் பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வரும் கல்லூரி மாணவன் பிரவீன்ராஜ் ஜக்காம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் கல்லூரிக்கு செல்வதற்காக நின்றிருந்தவரை, அதே பகுதியைச் சேர்ந்த தருஷ் மற்றும் ஹரி ஆகிய இருவரும் ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் திண்டிவனத்திற்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்.
திண்டிவனம் தனியார் திருமண மண்டபம் அருகே வந்தபோது, அப்பகுதியில் சாலை நடுவே இருந்த வளைவில் எதிர் திசையில் வந்த தனியார் பேருந்து திடீரென்று சாலையின் குறுக்கே திரும்பியது.
அப்போது இதனை சற்றும் எதிர்பார்க்காத இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த தருஷ் கட்டுப்பாட்டை இழந்து, இருசக்கர வாகனம் திடீரென்று குறுக்கிட்ட பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் இருசக்கர வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது. வண்டியை ஓட்டி வந்த தருஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த கல்லூரி மாணவர் பிரவீன்ராஜ் மற்றும் ஹரி சிகிச்சைக்காக திண்டிவனம் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆபத்தான நிலையில் உள்ள கல்லூரி மாணவன் பிரவீன்ராஜ் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இப்பகுதியில் தனியார் திருமண மண்டபத்திற்காக சாலை நடுவில் உள்ள வழி ஏற்படுத்தியதால் தான் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே இதே போன்று இப்பகுதியில் குறுக்கே வந்த வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.