திருக்கோவிலூர் அருகே கட்டி முடிக்கப்பட்டு ஒரே மாதத்தில் மீண்டும் பாலம் சேதமானதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தலிங்கமடம் கிராமத்தில், கடந்த ஆண்டு பெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் கிராமத்தில் உள்ள ராகவன் வாய்க்கால் மேம்பாலம் உடைந்து சேதமடைந்தது. சித்தலிங்கமடம் கிராமத்தில் 2000 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், ஏதேனும் இறப்பு ஏற்பட்டால் சுடுகாட்டுக்கு இந்தப் பாலம் வழியாகத்தான் எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புகாரளித்ததன் பேரில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பாலத்தை சரி செய்தனர். தற்போது மீண்டும் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் ராகவன் வாய்க்காலில் கட்டிய பாலம் மீண்டும் உடைந்து சேதமானது.
இதனால் தரமற்ற முறையில் பாலம் கட்டியதாக குற்றம்சாட்டி, இந்த பாலத்தை சரி செய்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.