திண்டிவனத்தில் மது போதையில் காரை எதிர் திசையில் ஓட்டி வந்து பொதுமக்களிடம் அட்ராசிட்டியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், நேரு வீதியில் மேம்பாலம் இறக்கத்திலிருந்து செஞ்சி பேருந்து நிறுத்தம் வரையிலான பகுதி ஒரு வழிப்பாதையாகும். இந்த சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே மயிலம் அடுத்த வெங்கந்தூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞர், தனது நண்பருடன் தனக்கு சொந்தமான காரில் ஒரு வழிப்பாதை என்றும் பாராமல் எதிர் திசையில் வந்ததோடு மட்டுமல்லாமல், அங்குள்ள பொதுமக்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திண்டிவனம் நகர காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளனர். தகவலையடுத்து, வட்டாட்சியர் அலுவலக சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் சம்பவ இடத்திற்கு சென்ற பொழுது, அவரைப் பார்த்தவுடன் வேகமாக பக்கத்து சாலையில் எதிர் திசையில் காரை ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு காரை துரத்திச் சென்ற சப் இன்ஸ்பெக்டரிடம் இளைஞர் வசமாக சிக்கினார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் சூர்யாவிற்கு மது குடித்ததற்கான சோதனை மேற்கொண்டனர். அவர் மது அருந்தியது உறுதியானதை அடுத்து அவருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அந்தக் காரைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மது போதையில் இளைஞர் ஒருவர் பொதுமக்கள் அதிகம் கூடும் சாலையில் ஒரு வழிப்பாதையில் எதிர் திசையில் காரை ஓட்டி அட்ராசிட்டியில் ஈடுபட்ட சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.