பருவதமலையில் அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் பகுதியில் அமைந்துள்ள தென் கைலாயம் என அழைக்கப்படும் 4650 அடி உயரமுள்ள பருவத மலையில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாம்பிகை அம்மன் மல்லிகா அர்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது.
இந்த கோயிலுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து பக்தர்கள் கொண்டு வரும் அபிஷேகப் பொருட்களை வைத்து வழிபடுவது வழக்கம்.
குறிப்பாக பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வருகை தந்து மலை ஏறிச் சென்று வழிபடுவது வழக்கம். சித்தர்களும் ரிஷிகளும் முனிவர்களும் இன்றும் காட்சி தரும் பருவதமலைக்கு நேற்று அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை முதலே பக்தர்கள் மலை ஏறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மலை அடிவாரத்தில் பக்தர்களை வனத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து மலை ஏற அனுமதித்தனர். படிகட்டுகள், செங்குத்தான கடப்பாறை படிப்பாறைகள், ஆகாயப் படி, ஏணிப்படி என பல்வேறு பாதைகளைக் கடந்து சென்று பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டும்.
பக்தர்களுக்கு தைரியத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கிட பக்தர்களின் கைகளில் மலை அடிவாரத்தில் வீரபத்திர கோவிலில் சக்தி கயிறு கட்டப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பிரம்மாம்பிகை அம்மன் மல்லிகா அர்ஜுனீஸ்வரர் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மூன்று நாட்களாக மலையேறும் பக்தர்களை வனவர் ஆ.சரவணன் தலைமையில் பரிசோதனை செய்து பிளாஸ்டிக் மற்றும் போதை பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது என்று வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.