செங்கம் அருகே பட்டப் பகலில் பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அந்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் அப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து பூ கொள்முதல் செய்து அதனை பெங்களூரு பகுதிக்கு ஏற்றுமதி செய்து வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மனைவி வீட்டில் இருந்து சற்று தூரத்தில் உள்ள பெட்டிக்கடையை கவனித்து வருகிறார். இதனால் பெரும்பாலும் அவர்கள் வீட்டில் இருப்பதில்லை.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து பீரோவின் அருகில் இருந்த சாவி மூலம் எந்தவித சிரமமும் இன்றி பீரோவைத் திறந்து உள்ளே இருந்த 30 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் சுப்பிரமணியின் மனைவி வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு உள்ளிருந்த நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.
பின்னர் அக்கம்பக்கத்தினர் மேல்செங்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மேல்செங்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் 30 சவரன் தங்க நகை கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.