வேடசந்தூர் அருகே மது குடிப்பதற்காக முகமூடி அணிந்து வந்து, தாத்தா பாட்டியை கட்டையால் தாக்கி கத்தியால் குத்தி 5 பவுன் தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்துச் சென்ற பேரன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கிழக்கு மாரம்பாடியில் தோட்டத்து வீட்டில் வசித்து வரும் வேளாங்கண்ணி ஆரோக்கியம் (வயது 75), கேத்தரின்மேரி (வயது 68). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இருவரும் திருமணமாகி தனித்தனியாக அருகே உள்ள சாமிமுத்தன்பட்டியில் வசித்து வருகின்றனர்.
தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் தென்னை மற்றும் சப்போட்டா மரங்களை வைத்து பராமரித்துக்கொண்டு தோட்டத்திலேயே வயதான தம்பதிகள் தங்கி உள்ளனர்.
கடந்த 19-ம் தேதி இரவு 8 மணிக்கு முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் இருவரையும் கட்டையால் தாக்கிவிட்டு, கையில் வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றபோது வேளாங்கண்ணி ஆரோக்கியத்திற்கு பின்கழுத்திலும், அவரது மனைவி கேத்தரின்மேரிக்கு கையிலும் கத்திக்குத்து விழுந்தது. இருவரும் அதிர்ச்சியில் இருந்து சுதாரிப்பதற்கு முன்பு கேத்தரின்மேரியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை இரு மர்ம ஆசாமிகள் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
காயமடைந்த முதிய தம்பதிகள் வேளாங்கண்ணி ஆரோக்கியம், கேத்தரின்மேரி ஆகியோரை அக்கம் பக்கம் இருந்த உறவினர்கள் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றனர்.
இது குறித்து எரியோடு போலீசில் வேளாங்கண்ணி ஆரோக்கியம் கொடுத்த புகாரின் பேரில் எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப் இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கிழக்கு மாரம்பாடி பகுதியில் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த பெரியகுளத்துப்பட்டியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 32) என்பவரைப் பிடித்து எரியோடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தபோது, “தனது நண்பர் பிரபுவுடன் சேர்ந்து மது குடிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி, தாத்தா பாட்டி உறவு முறையில் உறவினர்களான வேளாங்கண்ணி ஆரோக்கியம், கேத்தரின்மேரி ஆகியோரை கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தி 5 பவுன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்தோம்” என்று ஒப்புக்கொண்டார். பிரபுவுக்கு கிடைப்பதில் சரிபாதியாகப் பங்கு தருவதாகவும் கூறியதாகத் தெரிகிறது.
எரியோடு போலீசார் அருண்குமார், பிரபு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிடிபட்ட அருண்குமார் மீது எரியோடு போலீஸ் நிலையத்தில் அடிதடி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.