திண்டுக்கல் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் 3 மாதங்களாக சம்பளம் வழங்காததால் கிராம மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்தியாவில் வறட்சி காலங்களில், கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு கருதி, குளம், வரத்து வாய்க்கால் தூர்வாருதல். மண் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, காங்., ஆட்சி காலத்தில் 100 நாள் வேலை திட்டம் கொண்டுவரப்பட்டது.
காலம் செல்லச் செல்ல, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் எந்த பணிகளும் முறையாக நடைபெறவில்லை என்றும், தொழிலாளர்கள் பெயரளவில் மட்டுமே வேலை பார்ப்பதாகவும் புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளன.
இருப்பினும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.319 சம்பளம் வழங்கி வருவதால், ஊராட்சி வாரியாக ஏராளமான தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த தீபாவளியை முன்னிட்டு, இவர்களுக்கு அக்டோபரில் சம்பளம் வழங்கப்பட்டது. தற்போது, மூன்று மாதங்களைக் கடந்த நிலையில், இன்னும் 100 நாள் வேலை திட்டத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் இந்த வேலையை மட்டுமே நம்பியுள்ள குடும்பங்கள், மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. தங்களது உணவு தேவைக்கான பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட மக்களின் நலன் கருதி, 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பா.ம.க. வேடசந்தூர் தொகுதி செயலாளர் கணேசன் கூறியதாவது:
கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் இந்த 100 நாள் வேலை திட்டத்தில், 90 சதவீத மக்கள் ஏழை எளிய மக்கள் தான் செல்கின்றனர். மூன்று மாதங்களாக சம்பளம் வழங்காததால், அவர்களின் அன்றாட தேவைகளுக்கு மிகுந்த அவதிப்படுகின்றனர். வாரச்சந்தைகளுக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால் தொழிலாளர்கள் மன உளைச்சலில் உள்ளனர். ஊராட்சி தலைவர்கள் இல்லாததால், சம்பளம் வருமா, வராதா என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் நலம் கருதி, அவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை, மத்திய மாநில அரசுகள் முறையாக விரைந்து வழங்க வேண்டும் என்றார்.