வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அதிகாரி பிரகாஷ் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, கம்யூனிஸ்ட், தே.மு.தி.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு தங்கள் குறைகளை எடுத்து கூறினர். மேலும், உயிருடன் உள்ளவர்கள் ஒரு பகுதியில் ஒரே பெயரில் ஒரே பாலினம் ஆகியவைகளில் இருந்தாலும் அவர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அரசியல் கட்சியினர் சுட்டிகாட்டினர். மேலும் இந்த பெயர் நீக்கம் குறித்து விளக்கம் கேட்டு வாக்காளர்களுக்கு அனுப்படும் நோட்டீசும் ஆங்கிலத்தில் உள்ளதால், கிராமப்புற மக்களுக்கும் புரியவில்லை என எடுத்துக் கூறினர்.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு என ஐந்து தொகுதிகளில் மொத்தம் சுமார் 13 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10 சதவிகிதமான சுமார் 1.23 லட்சம் வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் ஒரே ஊரில் ஒரே பெயரில் ஐந்து பேர் இருந்தாலும் அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யபடுகிறது. இவ்வாறு செய்யபடுவதால் வாக்காளர்கள் பெரிதும் பாதிக்கபடுகின்றனர் என்று கூறினர்.
இதுகுறித்து தேர்தல் பார்வையாளர் அதிகாரி பிரகாஷ் பேசுகையில், தமிழ்நாட்டிலேயே 10 சதவிகிதம் வாக்காளர்கள் போலி வாக்காளர்கள் என சுமார் 1.23 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது இங்கு தான் இருக்கும் என அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவிப்பதாக கூறினார்.
மாநிலம் முழுவதும் இதேபோல் ஒரே பெயரில் வேறு இடத்தில் இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது. தமிழகத்தில் 6 கோடி வாக்காளர்களில் இதே போல் தமிழகத்தில் 45 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சிகரமான தகவலாகும்.