அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுபடி ரூ.50,000 ஊதியம் வழங்கிட வலியுறுத்தியும், கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தியும் கௌரவ விரிவுரையாளர்கள் கடந்த 3 ந் தேதி முதல் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளர்கள் கல்லூரி வளாகத்தின் முன்பு அமர்ந்து வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழ்நாட்டில் பணியாற்றும் தகுதியுடைய கௌரவ விரிவுரையாளர்களுக்கு யு. ஜி.சி அறிவித்துள்ள ஊதியம் ரூ.50000 த்தை வழங்கவேண்டியும், ஊதியம் தொடர்பாக நீதிமன்றம் அறிவித்துள்ள உத்தரவை அமல்படுத்த வேண்டியும், அரசு ஆணை 56 – ன்படி பணி நிரந்தரம் செய்யவேண்டியும், கோஷங்கள் எழுப்பி கல்லூரி வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள் தெரிவித்தனர்.