கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, செயற்கை கால்கள் மற்றும் உதவிச் சாதனங்கள் என்எல்சிஐஎல்-இன் சமூக பொறுப்புணர்வுத் திட்ட முயற்சிகளின் கீழ் வழங்கப்பட்டன.
என்எல்சி இந்தியா நிறுவனம் (என்எல்சிஐஎல்), பிரதமர் நரேந்திர மோடியின் ‘வளர்ந்த பாரதம் (விக்சித் பாரத்’) என்ற தொலைநோக்கு பார்வையை இந்திய செயற்கை கால்கள் உற்பத்திக் கழகம் (ஆர்டிபிஷியல் லிம்ப்ஸ் மேனுஃபேக்ச்சரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் – அலிம்கோ உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், என்எல்சிஐஎல் சமூக பொறுப்புணர்வுத் திட்ட முயற்சிகளின் கீழ், செயற்கை கால்கள் மற்றும் உதவிச் சாதனங்கள் ஆகியன ரூ.1 கோடியே 8 லட்சம் திட்ட மதிப்பீட்டில் வழங்கப்பட்டன.
இந்தத் திட்டம், பின்னர் ராஜஸ்தானில் உள்ள பர்சிங்சர் யூனிட் மற்றும் ஒடிசாவில் உள்ள ஜார்சுகுடா மற்றும் சம்பல்பூர் மாவட்டங்களின் தலபிரா திட்டப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் அலிம்கோ நிறுவனம் நடத்திய மதிப்பீட்டு முகாம்களில், கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி மற்றும் வேப்பங்குறிச்சி பகுதிகளில் 390 பயனாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
நெய்வேலியில் நடைபெற்ற இந்த விழாவில், என்எல்சிஐஎல் மனித வளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப் கலந்து கொண்டு, உதவிச் சாதனங்களான ஊன்று கோல்கள், பேட்டரி மூலம் இயக்கப்படும் மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வண்டி, வழக்கமாக கையால் இயக்கப்படும் மூன்று சக்கர வண்டி மற்றும் மடிக்கக்கூடிய சக்கர நாற்காலிகள் ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில், சட்டம், சிஎஸ்ஆர் மற்றும் மருத்துவப் பிரிவு செயல் இயக்குநர் டிவிஎஸ் நாராயணமூர்த்தி, என்எல்சி பொது மருத்துவமனை சூப்பிரண்டெண்ட் சுகுமார், சிஎஸ்ஆர் பொது மேலாளர் ஸ்ரீனிவாச பாபு, மற்றும் கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், என்எல்சிஐஎல் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரிகள், அலிம்கோ நிறுவன அதிகாரிகள், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர்கள், பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.