திண்டிவனத்தில் அரசு கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மேல்பாக்கத்தில் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் திண்டிவனம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு பொருளாதார பேராசிரியராக குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர், கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை தொலைபேசி மூலமாகவும் மற்றும் சமூக வலைதலங்கள் மூலமாகவும் கல்லூரியில் பயின்ற ஒரு மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி பேராசிரியர் சிறுமியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு தவறான முறையில் பேசி பாண்டிச்சேரிக்கு போகலாம் எனக் கூறி அழைத்ததாகவும், அதற்கு சிறுமி மறுத்து விட்டதாகவும், மேலும் அன்று இரவு 9 மணி அளவில் வீடியோ கால் மூலம் சிறுமியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நடந்த சம்பவத்தை மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் குமாரை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பேராசிரியர் குமார், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.