கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சித்தலூர் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி மகள் காவியா (16). இவர் விருத்தாசலம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் மோதிவிட்டு சென்றது.
இதில் காவியா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து விருத்தாசலம் போலீசார் காவியா உடலை பிரேத உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல விருத்தாசலம் அடுத்த வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் பூவரசன் ( 20 ). இவர் விருத்தாசலம் அடுத்த வேப்பூர் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு மனைவியும் ஒரு கைக் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் விபத்தில் இறந்த காவியா மற்றும் பூவரசன் ஆகியோருடைய உடல்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் நேற்று காலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனை முடிந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் உறவினர்களிடம் பிரேதங்களை ஒப்படைக்க காலதாமதம் ஆகிவிட்டது. இதனால் உறவினர்கள் ஏன் என்று கேட்டபோது ஆம்புலன்ஸ் இல்லை வந்து கொண்டிருக்கிறது என கூறியுள்ளனர்.
மேலும் ஒரு மணி நேரத்திற்கு மேல் பிரேதத்தை கொடுக்க தாமதமானதால் பொறுமை இழந்த சித்தலூரை சேர்ந்த காவியா உறவினர்களும், சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பூவரசனின் உறவினர்களும் திடீரென விருத்தாசலம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக பிரேதத்தை ஒப்படைக்காவிட்டால் நாங்கள் பிரேதத்தை தூக்கி சென்று விடுவோம் என கூறியுள்ளனர் .
அதனைத் தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் வரவைத்து காவியா உடலை அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர்.
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் இருந்து வர வைக்கப்பட்ட இலவச அமரர் ஊர்தி சேவையில் பூவரசனின் உடல் அனுப்பப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்தும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் பிரேதங்களை ஒப்படைக்காததால் ஆத்திரத்தில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.