பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தை சீரமைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி ஒன்றியம், பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 829 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்கள் பயின்று வந்த 2 கட்டிடங்களின் மேற்கூரை பழுதடைந்துள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையிலும், போதிய இட வசதி வழங்கும் வகையிலும் பழுதடைந்த கட்டிடத்தின் மேற்கூரையினை சீரமைக்க நேற்று இரவு பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாவட்ட நிர்வாகத்திடம் நேரடியாக கோரிக்கை வைத்தார்.
தலைமையாசிரியரின் கோரிக்கையினை ஏற்று நேற்று ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுடன் பெருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பழுதடைந்துள்ள 4 வகுப்பறைகள் கொண்ட 2 கட்டிடங்களின் மேற்கூரையினை ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் உடனடியாக சீரமைத்து மீண்டும் கட்டிடத்தினை மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்க உத்தரவிட்டு, உரிய திட்ட மதிப்பீட்டினை தயார் செய்து பணியினை உடனடியாக தொடங்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதேபோன்று பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், தலைமையாசிரியரின் கோரிக்கையினை ஏற்றும் மாணவர்களுக்கான புதிய கழிவறையினை பள்ளியில் கூடுதலாக அமைத்துத் தரவும், அதற்கான திட்ட மதிப்பீட்டினையும் தயார் செய்து பணியினை உடனடியாக தொடங்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்களை வழங்கிப் பாராட்டுத் தெரிவித்து, தமிழக அரசின் கற்றல் உபகரணங்களை உரிய முறையில் பயன்படுத்தி சிறந்த முறையில் கல்வி கற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் எனவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசின் உத்தரவின்படி
மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என ஆட்சியர் தெரிவித்தார்.