சேலம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய 200 பேர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளனர்.
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், சீமானின் அரசியல் போக்கினை விமர்சனம் செய்தும் நாம் தமிழர் கட்சியிலிருந்து மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் விலகி வருகின்றனர். சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கதுரை தலைமையில், மாநகர் மாவட்ட பொருளாளர் சதீஸ், கொள்கை பரப்பு செயலாளர் அழகரசன், விளையாட்டு பாசறை மாநில செயலாளர் வெங்கடேசன், வீரத்தமிழர் முன்னணி சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம், மாநகர் மாவட்ட மகளிர் பாசறை இணை செயலாளர் நாகம்மாள், வணிகர் பாசறை இணை செயலாளர் வசந்தகுமார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநிலத் தலைவர் வேல்முருகன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
அப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியதாவது:
உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் பிரபாகரனை நெஞ்சிலேந்தி தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்து செல்லும் தமிழக வாழ்வுரிமை கட்சியில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி அழகாபுரம் தங்கதுரை தலைமையில் கட்சியில் இணைந்துள்ள தம்பிமார்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இங்கே என்னுடன் 13 ஆண்டுகாலம் பயணித்து கட்சி பணியாற்றி வரும் கட்சியின் நிர்வாகிகளே. நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழக மக்களின் உரிமையை வென்றெடுக்க ஓரணியில் இருந்து பணியாற்ற வேண்டுகிறேன். சேலம் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியை முதன்மையான கட்சியாக எடுத்துச் செல்லுங்கள். கிராமம் கிராமமாக இளைஞர்களை உறுப்பினராக்குங்கள். உட்கட்சி தேர்தலுக்கு பிறகு புதியதாக கட்சியில் இணைந்தவர்ளையும் உள்ளடக்கிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் முத்துலட்சுமி வீரப்பன், சேலம் மாவட்ட செயலாளர்கள் மோகன்ராஜ், ராஜ்குமார், அய்யப்பன், யுவராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.