திருவாரூர் நகராட்சியுடன் கீழக்காவாதுகுடி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் திருவாரூர் நகராட்சியுடன் தண்டளை, பெருந்தரக்குடி, காட்டூர், கீழக்காவதுகுடி, புலிவலம், அம்மையப்பன் உள்ளிட்ட ஊராட்சிகள் இணைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதனால் 100 நாள் வேலை பாதிக்கப்படும், வரி உயர்வு ஏற்படும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என குற்றம் சாட்டி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் கீழக்காவதுகுடி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் திருவாரூர் நகராட்சி அலுவலகம் எதிரில் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழக்காவாதுகுடி ஊராட்சிக்குட்பட்ட பிலாவடிமூளை, சேந்தமங்கலம், விஸ்வாமித்திரைபுரம், வடகால் உள்ளிட்ட பகுதிகள் நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என குற்றம் சாட்டி கோஷங்களை எழுப்பி பெண்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.