திருவண்ணாமலை மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்தில் பிரதிவாரம் வியாழக்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வேண்டி விண்ணப்பித்தவர்களில் 103 பேருக்கு அடையாள அட்டைகளும், பேருந்து பயண அட்டை 8 பேருக்கும், ரயில் பயண சலுகை அட்டை 12 பேருக்கும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை 3 பேருக்கும் வழங்கப்பட்டது. மேலும் வங்கி கடன் வேண்டி விண்ணப்பித்த 7 மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வங்கிக்கு கடன் வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வழங்கி, அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராம்பிரதீபன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் செந்தில்குமாரி மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.