திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா அருகில், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றிய அரசின் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பட்ஜெட் நகலை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொ.மு.ச. மாநில பேரவை துணை தலைவர் சௌந்தர்ராஜன் தலைமை தாங்கினார். எல்.பி.எப். மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் காங்கேயன் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் முத்தையன், எல்.பி.எப். மண்டல பொருளாளர் மோகனரங்கன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் பாரி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கத்தினர் கோசங்களை எழுப்பினர். மேலும் பட்ஜெட் நகலை கிழித்தெரிந்தும் கோசங்களை எழுப்பினர். முடிவில், மாவட்ட சி.ஐ.டி.யூ. துணை தலைவர் நாகராஜ் நன்றி கூறினார்.