செங்கம் செய்யாறு மேம்பாலம் கீழ் பகுதியில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டுவதால், பாலத்தின் உறுதித்தன்மை சீர் குலைவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
செங்கம், போளூர் சாலையில் அரை நூற்றாண்டு கடந்து செய்யாறு மேம்பாலத்தில் கீழ்பகுதியில் வணிகர்கள் சிலர் தங்களுடைய வணிக கழிவுகளை இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கொட்டுவதால், வீதிகளில் சுற்றி தெரியும் கால்நடைகள் குப்பை கழிவுகளை கிளறி உண்பதால் துர்நாற்றம் வீச தொடங்கி அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு பல்வேறு வகையான அரிய வகை நோய் தொற்றுகள் ஏற்படுகிறது.
மேலும் நீர் மாசடைவதுடன், சமூக விரோதிகள் சிலர் குப்பை கழிவுகளை தீயிட்டு செல்வதால் பாலத்தின் உறுதி தன்மை குறைகிறது. இந்த பாலத்தின் வழியாக சென்னை புறநகர் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.
மேலும் இறைச்சி கழிவுகள், மீன் கழிவுகள், இறந்த நாய்கள் உள்ளிட்டவை பாலத்தின் கீழ்பகுதியில் வீசிவிட்டுச் செல்வதால், அதிக துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, குடியிருப்பு பகுதிகளுக்கும் இந்த நாற்றம் வீசுவதால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், தினம்தோறும் பாலத்தின் மீது செல்லும் பொதுமக்களும் முகம் சுழிப்போடு செல்கின்றனர்.
பாலத்தின் அருகே 2 தனியார் பள்ளிகளுக்கும் அதிக துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து குப்பை கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டும் நபர்களை கண்டறிந்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படை நேரில் ஆய்வு செய்து பாலத்தின் உறுதி தன்மையை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.