கடலூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டுமென ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட பண்ருட்டி, சிறுகிராமம் மற்றும் பெரியகாட்டுப்பாளையம் ஆகிய அரசு மேல்நிலை பள்ளிகளில் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, 12ஆம் வகுப்பு பொது தேர்வில் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி என்ற இலக்கினை அடைய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.
ஆய்வின்போது, மாணவர்களின் வருகை பதிவேட்டின் அடிப்படையில் ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணித்து மாணவர்கள் இடைநிற்றலின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். பருவத்தேர்வு, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வின் தேர்ச்சி விகிதத்தை கணக்கில் கொண்டு, தேர்ச்சி குறைவாக உள்ள மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மாணவர்களுக்கு ஊக்கப்பயிற்சி அளித்து தன்முனைப்புடன் கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக அவர்களுக்கு மீளாய்வுக்கூட்டம் நடத்தி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்திட வேண்டும்.
தேர்ச்சி குறைவாக உள்ள மாணவர்களுக்கு கூடுதல் வகுப்புகளை நடத்தி அடுத்துவரும் பருவத்தேர்வில் கூடுதல் மதிப்பெண்களை எடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதிப்பெண் குறைவாக பெற்றுள்ள மாணவர்கள் தங்களுக்கென நடைபெறும் சிறப்பு வகுப்புகளில் கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.
மாணவர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கென ஒரு உயர்கல்வியை இலக்காக கொண்டு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
ஆய்வின் போது, முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், மாவட்ட கல்வி அலுவலர் துரைபாண்டியன், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.