கடலூர் மாவட்டத்தில் புதிய திட்ட பணிகளுக்கு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், சொக்கன் ஓடை குறுக்கே ரூ.9 கோடி மதிப்பீட்டில் குச்சிப்பாளையம் ஒழுங்கியம் கட்டும் பணிக்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.
இதனைத்தொடர்ந்து மஞ்சக்குப்பம் முதல் குண்டுஉப்பலவாடி கிராமம் வரை, பெண்ணயாற்றின் வலது கரையில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
இதில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது:
சிதம்பரத்தில் உள்ள சொக்கன் ஓடை வாய்க்காலின் கடைமடையில் தண்ணீரை தேக்கி பாசனத்திற்கு பயன்படுத்துவதற்கும், வெள்ள காலங்களில் வெள்ளநீரை வெளியேற்றியும் மற்றும் உப்பனாற்றிலிருந்து கடல்நீர் வாய்க்காலில் உட்புகாமல் இருக்க ஷட்டருடன் கூடிய ஒழுங்கியம் அமைப்பது மற்றும் கரையை மண் கொண்டு பலப்படுத்துவது அவசியமாகிறது.
சொக்கன் ஓடையின் கடைமடை பகுதியில் ஒழுங்கியம் அமைத்துதர பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் சொக்கன் ஓடை குறுக்கே குச்சிப்பாளையம் ஒழுங்கியம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இவ்வொழுங்கியம் கட்டுவதன் மூலம் 1450 ஏக்கர் விவசாய நிலங்கள் உகந்தமுறையில் பாசனவசதி பெறும். மேலும் உப்புநீர் உட்புகுதல் தடுக்கப்படும் மற்றும் நிலத்தடிநீர் மேம்பட்டு சுமார் 5300 மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக பயன்பெறும் வகையில் அமையும்.
பெண்ணையாற்றில் பாதிப்பு ஏற்படுத்தும் பகுதிகளில் முதற்கட்டமாக மஞ்சக்குப்பம் முதல் குண்டு உப்பலவாடி கிராம் வரை நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் 160 மீ ஆர்.சி.சி தடுப்புச்சுவர் அமைக்கும் பணி, 575 மீ சரிவுச்சுவர் அமைக்கும் பணி, நகரம் மற்றும் கிராமங்களில் பெய்கின்ற மழைநீர் வடிவதற்கு வடிகால் மதகு அமைத்தல், 2100 மீ பெண்ணையாற்றின் வலது புற கரையினை பலப்படுத்தும் பணி, ஆற்றின் உட்பகுதியில் உள்ள மண்திட்டுகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் பா.தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் மரு.எஸ்.அனு சார் ஆட்சியர் (சிதம்பரம்) சீ.கிஷன் குமார் நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் காந்தரூபன், அருணகிரி, கிள்ளை பேரூராட்சி தலைவர் மல்லிகா உட்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.