கடலூர் அருகே அழிக்கப்பட்ட முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரித்துள்ளார்.
கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரை ஊராட்சிக்குட்பட்ட மலையடிகுப்பம், கொடுக்கன் பாளையம், பெத்தாங்குப்பம் கட்டார சாவடி ஆகிய நான்கு கிராமங்களில் சுமார் 165- ஏக்கர் இடத்தை அரசு கையகப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் கிராம மக்கள் பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தற்போது விளை நிலங்களை அழித்து அரசு நிலங்களை கையகப்படுத்தி வருவதற்கு அரசியல் கட்சிகள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
கடலூரில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் அஸ்வத்தாமன், மலையடி குப்பம், கொடுக்கன் பாளையம், பெத்தான் குப்பம், கட்டார சாவடி ஆகிய பகுதிகளில் பாதிப்புக்குள்ளான இடத்தையும் அப்பகுதி கிராம மக்களையும் சந்தித்து பேசினார். அப்போது அப்பகுதி மக்கள் தங்களது வேதனைகளை அவரிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அஸ்வத்தாமன், அழிக்கப்பட்ட முந்திரி மரங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் உள்ள கடலூர் மாவட்டத்தில் இதுபோன்று விவசாயிகளுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி இந்த சம்பவங்கள் ஒரு வேதனைக்குரியது என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பேட்டியின் போது கடலூர் கிழக்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் அக்னி கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, அணி நிர்வாகிகள் உடனிருந்தனர்.