விருத்தாசலம் பகுதியில் திடீரென பெய்த மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதமானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், முழுவதிலும் நேற்று திடீரென மழை பெய்தது. இந்த மழையால் விருத்தாசலம் பகுதியில் நடந்து வரும் சம்பா அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை, அந்தந்த பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர்.
மேலும் விவசாயிகள் விற்று விட்டு சென்ற நெல் மூட்டைகளும், அந்தந்த நேரடி கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று பெய்த மழையினால் திறந்த நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் இருந்த மூட்டைகள், விவசாயிகள் குவித்து வைத்திருந்த நெல் குவியல்கள் அனைத்தும் மழையில் நனைந்து சேதமாயின.
மேலும் ஒரு சில பகுதிகளில் தாழ்வான பகுதியாக இருந்ததால், தண்ணீர் வெளியேற வழியின்றி நெல் மூட்டைகளை சுற்றி தேங்கி நின்றதால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேதம் அடைந்தன.
மழையில் நனைந்த நெல்லை மீண்டும் உலர வைத்து விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
விருத்தாசலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாயின.
இந்த திடீர் மழையால் விவசாய விளைநிலங்கள் ஈரமாகிவிட்டதால் நெல் அறுவடை இயந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.