திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் குடமுருட்டி ஆறு வழிநடப்பு தெருவில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
ஜனவரி மாதம் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளுக்கு பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், பிப்ரவரி மாதம் தொடங்கியும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை.
இந்நிலையில் வலங்கைமான் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல்மணிகள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்காததால் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை குடமுருட்டி ஆறு வழிநடப்பு பகுதியில் கொட்டி வருகின்றனர். மேலும் இரவு பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் நிலையிலும், ஆடு, மாடு தொல்லைகளாலும் விவசாயிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்துள்ளதால், ஈரப்பதம் குறைந்து காணப்படுவதாக விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
எனவே விவசாயிகளின் கவலைகளை நீக்க வலங்கைமான் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க புதிய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.