திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை
அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களை பாதுகாக்க
மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் தொடர்பாக மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் காயத்ரி
கிருஷ்ணன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை, நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, காவல்துறை,
நகராட்சி உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும்
பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவரிக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த அவர், திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு
பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக நேற்று ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து
இன்று (நேற்று) மழையால் பாதிக்கக்கூடிய இடங்களை நேரில் பார்வையிட்டோம்.
மாவட்ட ஆட்சியர் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்துள்ளார். அனைவரும்
ஒன்றிணைந்து குழுவாக பணியாற்றி பொதுமக்களுக்கு அன்றாட பணிகள் பாதிக்காமல் இருக்க
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் ஆறுகளில் தண்ணீர் தேங்காமல் செல்ல ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகளை
நீர்வளத்துறையினர் தொடர்ந்து செய்துவருகின்றனர். ரேஷன் கடைகளில் தேவையான
அனைத்து பொருட்களும் இருப்பு உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகள்
திருப்தியாக உள்ளன. மழை அதிகம் இல்லாததால் பாதிப்பு இல்லை.
மன்னார்குடி பகுதிகளில் விளைநிலங்களில் தேங்கிய தண்ணீர் வாய்க்கால்களில் வடிந்து
வருகிறது. திருவாரூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்டிலிருந்து ஆரஞ்சு அலர்ட்டாக குறைந்துள்ளது.
மழை நிலவரத்தை பார்த்த பிறகுதான் பள்ளிகள் விடுமுறை பற்றி கூற முடியும். மண்ணின்
தன்மையால் சாலைகள் பாதிப்பு ஏற்படும் சாலைகளை தற்காலிகமாக சரி செய்துவிட்டு மழை
நின்றவுடன் நிரந்தரமாக சரிசெய்து தரப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர்
சண்முகநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் செந்தில்வடிவு, வருவாய்
கோட்டாட்சியர்கள் சௌம்யா (திரு வாரூர்), கீர்த்தனா மணி (மன்னார்குடி)
கோட்டப்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் (ம) பராமரிப்பு) இளம்வழுதி
உள்ளிட்ட அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.